தட்டையாகித் தளர்வதோ தலைமுறை?

 

நன்றாகத் தானே இருந்தார்

இப்போது என்ன ஆயிற்று?

 

'தமிழன்' என்பவர் பற்றி

பேச்சு வந்ததும்

தள்ளாட்டம் துள்ளாட்டம் போட

அவரே வந்தார்.

 

பராக் பராக் என்று

முன்காலத்தில் வந்தவர்

பராக்கு பார்த்தபடி இப்போது  வருகிறார்!

 

பக்கத்து வீட்டுக்காரர் நல்ல புத்தகம் படிக்கிறார்,

மேல் வீட்டுக்காரர் நல்ல வியாபாரம் பண்ணுகிறார்

இவர் மட்டும் ...அடக் கடவுளே..'

தலையில் அடித்தனர் பார்த்து நின்றவர்.

 

விழுந்த வேட்டியை

வளைத்துப் பிடித்து

போதை வழியச் சிரித்தார்

 

கல்யாணம் என்றால் போதை..

கருமாதி என்றால் போதை ..

மேடையில் குடிவீட்டில் குடி

வேலைக்கு வந்தால் குடி..

ஓட்டுக்குக் குடி

பேச்செல்லாம் குடியைப் பற்றியே தான்!

 

பொழுதுபோக்குக் குடிப்பார்கள்

பொழுதெல்லாமா குடிப்பார்கள்?’

 

என் கடவுள் குடி தான்!

நான் அதையே வணங்குகிறேன்!

நான் இந்தக் குடியின் விசிறி!’

என்று வழிபாடு நடத்தினார்.

 

ஆளுமையே குடி தான் என்றால்

எல்லைகள் என்று விரிவுபடும்?’

 

விக்கலோடு விக்கித்து நின்று

சற்றே சிந்தித்தார்;

மறுநொடியில் கைபேசியில்

புது பாட்டிலைக் கண்டதும்

பழையபடி போதை வழிய,

சிரிப்புத் தான் கும்மாளம் தான்

 

இப்படி ஆளே மாறிப் போகிற அளவுக்கு

அப்படி என்னத்தைக் குடிக்கிறார்?

 

வீட்டுக்குள் நுழைந்ததும்

தொலைகாட்சி மேலிருந்த

பாட்டிலைத் திறந்து குடித்துக்   

குத்தாட்டம் போட்டார் தமிழன்’.

 

இது சாராயம் அல்லவே …’

உற்றுப் பார்த்தேன்

 

சி.. னி..மா..

 

என்று எழுதி இருந்தது புட்டியில்!  

- புதுயுகன்

Comments

Popular posts from this blog

மாயா யதார்த்தம் - ஒரு சிறிய அறிமுகம்

When Democracy speaks the wise listen!

தேசியத் தமிழ்