Monday 12 July 2010

பிறக்குது யுகம்

உருண்டு உருண்டு ஓடுவதால் தான் 'ஆண்டு' என்ற வார்த்தையின் நடுவே இரயில் வண்டி போல ஒரு 'ண்' ஓடிக் கொண்டிருக்கிறதோ?


ஓடட்டும், ஓடட்டும். நம்மையும் தூக்கிக் கொண்டு தானே ஓடுகிறது.

காலாவதி ஆவதற்குள் இந்த இரயில் பயணத்தில் சேகரிக்க வேண்டிய சிநேகங்கள், படிக்க வேண்டியவை, எழுத வேண்டியவை ஏராளமாக இருக்கிறது.

இப்படி ஒரு இரயில் 'குப்குப்' என்று மனதின் உள்ளே ஓடுவதால் தான் பிறந்தது இந்த 'பிறக்குது யுகம்'.

ஏன் 'பிறக்குது யுகம்'?

பிறந்து கொண்டிருக்கிறது யுகம் என்று சொன்னால் தாமதித்து விடுமோ என்ற 'கண்டேன் சீதையை' கரிசனம் தான்.

பாரம்பர்ய பூரிப்பும், அதையும் தாண்டிய தேடலின் கனவுகளும், புத்தம் புதியதின் மீதான தீராத காதலும் தான் இந்த ''பிறக்குது யுகம்'.

இங்கே குறைந்தபட்ச உத்தரவாதம் புதுமை. அதாவது புது யுகத்திற்கான பயணச்சீட்டு இந்த இரயிலில் கிடைக்கும்.

ஏதேது பீடிகை, 'பில்டப்' எல்லாம் எகிறுகிறதே 'வெளியே வா கவனித்து கொள்கிறேன்' என்றும் சொல்ல முடியாது - வண்டி ஓடிக் கொண்டிருக்கிறதே.

சரி 'பிறக்குது யுகம்' என்பதற்கான பெயர்க் காரணம் எல்லாம் முடிந்தது.

இனி என் அடுத்த பதிவு 'மாயா யதார்த்தம் - ஒரு சிறிய அறிமுகம்' என்பது தான்.

சமீபத்தில் மிக செம்மையாக அரங்கேறிய நமது உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிலே 'மாயா யதார்த்தத்தின் புதிய கீற்றுகள்' என்ற எனது ஆய்வுக் கட்டுரையை வழங்கினேன். அந்த பகிர்வுக்கு கிடைத்த வரவேற்பின் பின்சேர்ப்பு தான் நீங்கள் 'விரைவில் எதிர்பார்க்கும்' என நான் அழைக்க விரும்பும் இந்த கட்டுரை.

பயணிகளாகிய உங்கள் கருத்தே இந்த பயணத்தை உந்துவதால் உங்கள் சிநேகமான, நியாயமான, அறிவாழமான, மற்றும், மற்றும் ஆன விமர்சனங்களை வரவேற்கிறேன்.


இந்த வினாடி பிறக்குது யுகம்.