Sunday 14 August 2022

தேசியத் தமிழ்


ஆளுங்கட்சி வேறுதேசபக்தி வேறு 

இந்த அடிப்படை அறிவு 

அற்றவரை மேடை ஏற்றாதே

தமிழகமே


மாநிலங்களின் கூட்டமைப்பே என்றாலும்

அமெரிக்கா ஒன்றே;

அதன் தேசபக்தியை மறவாதே

தமிழகமே


இந்தியக் கடவுச்சீட்டில் வாழ்ந்து

பிற தேசக் கூலிகளாக

பிழைப்போட்டும் சிறியார்களை

இனம் கண்டுகொள் எம்

தமிழகமே


பசும்பொன் முத்துராமலிங்கனார்

காயிதே மில்லத்

அப்துல் கலாம்

சீனிவாச இராமானுசன்

இவர்களை மறவாதே

தமிழகமே


இந்தியத் துணைக்கண்டம் முழுதும்

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்

பல்கிப் பரவி பண்பாட்டுக் கொடை ஈந்த

உரிமைக்கார இந்தியர் யாம்;

இதை மறந்தும் மறக்காதே

தமிழகமே


பிரிவினையாளரின் நோக்கம் அறி;

அவர் கருத்தியலை அரி;

எடை போட்டே

நடை போடு

தமிழகமே


பாரதியும் வவுசியும்

பைத்தியங்கள் அல்ல என்பதை



அவரது இரத்தக் கொடை 

பெற்றதாலே புரிந்து கொள்

தமிழகமே


உலக அரங்கில் நீ இந்தியன்;

உள்ளூர் உளரல்களை

உதைத்தே புறந்தள்ளி ஓட விடு

அறிவார்ந்த எம்

தமிழகமே




75ஆம் இந்திய விடுதலை நாள் நல்வாழ்த்துகள்!


                   புதுயுகன்

Sunday 31 January 2021

எளிமை சூழ் எழில்கள்

 

நூல்: ‘எப்போதும் போல் இல்லை எப்போதும்’ (வெளியீடு: வானதி பதிப்பகம்)

நூலாசிரியர்: கவிஞர் ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் 

விமர்சனம்: கவிஞர் புதுயுகன்

         எளிமை சூழ் எழில்கள்

       நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்

இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல்…”

பாரதியாரின் இந்தப் பதவிப் பிரமாணத்தை அடியொற்றி அணிதிரண்டது கவிஞர் பட்டாளம். அதில் தனக்கானதொரு தனித்த அடையாளத்தை ஏற்று தொடர்ந்து இயங்கி வருகிற கவிஞர் திரு. ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள்.  

‘எப்போதும் போல் இல்லை எப்போதும்’ என்ற தலைப்பில் அவர் எழுதி வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் கவிதை நூல் அந்த அடையாளத்தின் சமீபச் செதுக்கல்.

தான் சாதாரணன் என்று இயல்புக் கட்டத்தில் துவங்கி நாள்படகொள்கை சிதையாதுதொடர்ந்து இயங்குதல் சமூக நலன் காக்கும் ஒரு வளம். அந்த வளத்தில் தேர்ந்து மலர்களாக கவிதைகளை இந்த நூலில் பூக்கச் செய்திருக்கிறார் கவிஞர். அதனால் சாரலில் நனைந்து கொண்டே ஒரு பூங்காவில் நடக்கிற உணர்வைத் தந்து விடுகிறது இந்த நூல்.

கவிஞனாக இருப்பதைத் தான்

கௌரவமாகக் கருதுகிறேன்

(‘கவிஞனாய் இருங்கள்’, பக்:32)

என்ற தன்விளக்கத்தோடு தொடங்குகிற அந்தப் பூங்கா உணர்வை சில உதாரண வரிகள் கொண்டு கூர்ந்து கவனிக்கலாம்.

நீங்கள் பிரபலமாக வேண்டும் என்று எழுதாதீர்கள்

உங்கள் படைப்புகள் பிரபலமாகட்டும்

 (‘பாடல்களில் பண்பாடு காப்போம்’, பக்:37)

கலை வாழ்க்கைக்காகவே’  என்ற கோட்பாட்டை அறிவோம். அதையே புதிய கோணம் ஒன்றைத் திறந்து, இப்படி நிலைநிறுத்தியிருப்பது அருமை.   

சமுதாய அவலத்தில் கண்ணடைத்து பூக்களை மட்டும் பார்ப்பதில் என்ன பயன்?  ‘பசிவயிற்றில் படர்ந்திருக்கும் வரிகளை பார்க்காமல்..’  என்று ஒரு இடத்தில் பசியை பாடுபொருளாக இவர் பார்க்கிறார். அதனால் தான் பெருந்தலைவர் காமராசரை சமுதாய அக்கறையோடு இப்படி மீட்கை செய்யவும் விழைகிறார்;

 

பிழைமலிந்த

பூமியாகிப் போன நாட்டில்

மழை சுமந்த

மேகம் போல் இவரே வந்து

பொழிய வேண்டும்

                                                                                                                ('கதர் போர்த்திய கண்ணியம்', பக்:85)

ஒரு உணர்வு சிந்தனையை கண்டுபிடிக்கிற போது, சிந்தனை சொற்களை கண்டுபிடிக்கிற போது கவிதை நிகழ்கிறது என்பார் அமெரிக்க கவிஞர் இராபர்ட் பிராஸ்ட். தாய்மை உணர்வை சிந்தனையால், சொற்களால் கவிஞர் கண்டுபிடித்தபோது பிறந்த நல்ல கவிதை இது.

 

பழைய சேலைகளை அடுக்கியே

எங்களுக்கு மெத்தை செய்வாள்

அதில் படுத்தால்

அம்மாவே அணைத்தது போலிருக்கும்

            …..

அவள் உடுத்திய

சேலைகள் கிழிந்திருக்கலாம்.

அவளை பற்றிய நினைவுகள் மட்டும்

இன்னும் அப்படியே.

(அம்மாவின் சேலை, பக்: 114)

அதைப் போல, தமிழ்நாட்டின் உணர்வலைகளை உலுக்கிய சம்பவங்களில் ஒன்று கும்பகோணம் தீ விபத்து. உயிரிழந்த மழலைகளின் இழப்பை, அந்த உணர்வை கண்டெடுத்தபோது உணர்ச்சிமிகு கவிதை பூத்திருக்கிறது.   

'தலைவாரிப் பூச்சூடி

அந்தத் தளிர்களை அனுப்பிய

தாய்தந்தையரை ...

தலைவாழை இலையில் வைத்து

தூக்கி வர வைத்தாயே…

                           (‘போன பிள்ளை வருமா?’, பக்:66)

ஓசை நயத்தாலும் ஈர்த்துச் செல்கின்றது பூங்கா உணர்வு. உதாரணமாக …

பாரதியைத் தெரியும்

பேரதிகம் பெற்றுவிட்டு

ஊரதிகம் பேசுகின்ற

 

 (‘பாரதி நீ...’, பக்:75)

நிகழ்கால சம்பவங்களை கவிதையாக்குதல் ஒரு கவிஞனின் முக்கிய பணி. ஆயிரமும் ஐநூறும் செல்லாமல் போனதை இயம்பும் போது 'என்றாலும் உழைத்த பணம் ஒவ்வொரு நாளும் செல்லும்’ எனப் பாடியிருப்பது நல்ல முத்தாய்ப்பு (‘செல்லும்’, பக்:64).

மேலும், நிகழ்கால சம்பவங்கள் பகடியோடு இப்படி கலந்துவிடுகின்ற போது இரசனை விஞ்சி விடுகின்றது;

'அடுத்தவரைப் பற்றிய அக்கறையில்லை.

ஆனால் அடுத்த வீட்டைப் பற்றி

அறிந்து கொள்கிற ஆர்வத்துக்கு மட்டும்

அளவில்லை

(‘அடுக்கடுக்கான வீடுகள்’, பக்:103)

 

படைத்தவன் மிகவும்

பெருமைபட்டான்

“இரண்டொரு மாதங்களாக

யாரும் பொய் பேசவில்லை” என்று

 

பாராட்டு விழாக்கள்

போட வழியில்லை ...                    (படைத்தவனின் பிரமிப்பு’, பக்:266)

தொற்று நோய் பொது முடக்க நாட்களையும் விடவில்லை. மேற்கண்டவிதமாக நலுங்கு செய்திருக்கிறார்.

எதிர்பாராத கோணங்கள் இல்லாவிட்டால் புதிய கவிதையும் எதற்கு?

‘வார்த்தைகள் விதை நெல்லை போல’ என்கிறார் ஒரு இடத்தில். ‘நடிகையின் முதலிரவு’ (பக்:239) போன்ற கவிதைகளில் புதிய சிந்தனையும், புதிய பார்வையும் மிளிர்வது பாராட்டுதலுக்குரியது.

 

மற்றொன்றையும் சொல்லவேண்டும். 288 பக்கங்களில், 118 கவிதைகளை தாங்கி வந்திருக்கிற இந்த நூலை இந்த மூத்த கவிஞர் இளைய கவிஞான எனக்கு வழங்கி மகிழ்ந்திருக்கிறார். எனது மகிழ்ச்சியையும் நன்றியையும் இங்கே பதிவு செய்கிறேன்.

“வங்கி, ஜீவனம் தந்தது; வளர்தமிழ் என் ஜீவனைக் காத்தது” எனச் சொல்கிறார் இவர்.

வினையாற்றும் போது வல்லினம்

உரையாற்றும் போது மெல்லினம்

அறம் ஆற்றும் போது இடையினம்

இந்தத் தத்துவங்களோடு இயங்கி கவிதை உறவு இலக்கிய இதழின் மூலமாக பலரையும் பல்லாண்டுகளாக இணைத்தும் வந்திருக்கிறார். அது மேலும் தொடரட்டும்.

‘எப்போதும் போல் இல்லை எப்போதும்’ நூல் - எளிமை சூடிய எழில்!