மாயா யதார்த்தம் - ஒரு சிறிய அறிமுகம்

இலக்கியங்களை வகைப் படுத்துதல் எழுத்தாளனை மட்டுமல்ல, வாசகனை, வாசிப்பு அனுபவத்தை வகை படுத்துவதற்காகவும் தான்.

மாயா யதார்த்தத்தின் சிறப்பு என்னவெனில் நம் அனைவரின் வாழ்விலும் நிகழும் ஒரு விஷயமாக, அந்தரங்கமான உணர்வுகளை தொடும் அனுபவமாக விளங்குவது தான்.

யதார்த்தமான ஒரு கதைக்குள், யதார்த்தம் கடந்த விந்தையான
சங்கதிகள் வருவது மாயா யதார்த்த கதைகளின் லட்சணம்.

இந்த வகை கதைகளை பற்றி இன்னும் அறிய விரும்புகிறவர்கள் பின்வரும் இணைப்புகளில் எனது பகிர்வில் கேட்கலாம்;

http://www.youtube.com/watch?v=SpbrMjaukTQ&feature=player_embedded

http://www.youtube.com/watch?v=UFxfVt_sczg&feature=player_embedded

இந்த இலக்கிய வகை அறிவியல் கதைகளின் இறுக்கத்தை, கட்டாயங்களை தளர்த்தி விடுகின்றன. வினோத கதை போல்

எந்த கட்டாயங்களும் இல்லாத வெறும் அதீத கற்பனையும் அல்ல.

இவை ஒரு மனிதனின் விந்தையான அனுபவத்தை குறிப்பவை. அந்த அனுபவம் ஏற்படாதவருக்கு விந்தை. அனுபவம் ஏற்பட்டவருக்கு யதார்த்தம்.

ஒவ்வொரு தனி மனிதனும் சமூகத்தின் ஒரு பகுதி என்றால்,
 எல்லா மனிதர்களின் அனுபவ தொகுதி தான் ஒரு சமூகத்தின் அனுபவம். அதனால் தான் எந்த சமூகமும் முழுமை உற்றது அல்ல; குறைகளாலேயே நிரம்பப் பெற்றதும் அல்ல.

பிறரை குறை கூறும் நமக்கு, அந்த மனிதரின் புறச் சூழலை
விமர்சிக்கும் நமக்கு அவரின் அகச் சூழல் தெரியாது. இருந்தும் விமர்சிக்கின்றோம். ஒரே காரணம் விமர்சனங்கள் இலவசம் மட்டுமல்ல அவற்றிற்கு தண்டனை பெரும்பாலும் கிடையாது என்பதும் தான்.

மாயா யதார்த்த கதைகள் இந்த குறைபாடுகளை எல்லாம் புதிய கோணத்தில் சந்திக்கின்றன.

சரித்திரம், சமூக குறைபாடுகள் போன்றவற்றை மாயா யதார்த்தம் விந்தை குறியீடுகளால் பதிவு செய்கின்றது. அந்நிய மோகம் மற்றும் தாக்கம் நிறைந்த துணைக்கண்டத்தின் சமூக அமைப்பு இந்த வகை கதைகளுக்கு நல்ல களம் ஆகின்றது.

நேபாலின் வார்த்தைகளில் 'பாதி வளர்ந்த' சமூகங்கள். இந்த வர்ணனையின் வலிமை இன்றைய காலகட்டத்திற்கு இன்னும் பொருந்துவதாக இருக்கிறது.

யதார்த்த கதைகளின் பலத்தை வைத்து கொண்டு விந்தை கூறுகளான தனி அனுபவம் என்ற கூடுதல் பரிமாணத்தையும் எடுத்துக் கொண்டு வருகிறது மாயா யதார்த்தம்.

செம்மொழி மாநாட்டில் சந்தித்த, பங்கெடுத்த நண்பர் திரு. அண்ணா சுந்தரம் 'பிறக்குது யுகம்'என்ற பதிவைப் பார்த்து விட்டு இப்படி எழுதினார்.


Dear Puthu Yugan TK Ram

First time I heard about Maya yathartham when I attended your speech at Chemmozhi manadu - You explained the concept very well - even to a layman like me - Chewing the concept I have an idea to share with you - I think if your time permits you can do that through this puthuyugan blog - My idea is - If you publish “Siruvar Maya yathartha kathaikal in Tamil” - it will be more useful for children learning Tamil in a interesting way - If you have anything such I can put that in practice to my students at Tamil school where I am a Principal - Voluntary role

Thank You

With Regards

Anna Sundaram

Lubrication Management Services Division, VAP Australia Pty Ltd


அவரது சிந்தனையை தொடர்ந்து இதோ ஒரு முயற்சி;

ஹெய்டியின் பூகம்ப தாக்கத்தை இரண்டு கதாசிரியர்கள் பார்க்கிறார்கள் [தூரத்தில் இருந்து தான்]. ஒருவர் யதார்த்த கதாசிரியர். மற்றவர் மாயா யதார்த்தம்.

யதார்த்த கதாசிரியர் இப்படி சொல்கிறார்:

   ‘ஹெய்டியின் தலைநகர் போர்டோப்ரின்சில் அந்த கறுப்பு    நாள்.
சீட்டுக்கட்டை போல் நெருக்கியடித்துக் கொண்டிருக்கும் வீடுகளுக்கு வெளியே அந்த இரட்டை பிள்ளைகள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

குழாய்த் தண்ணீரை எடுத்து வரும் அந்தத் தாய் தன் பிள்ளைகளை நோக்கி சத்தமாக குரல் கொடுத்த அதே நொடியில் பூமி நடுங்கியபடி நெஞ்சு பிளந்தது. ஓடிய தாயின் தலை மீது ஒரு கட்டடத்தின் மேல் தளம் தலை இறங்குகிறது. அந்தப் பக்கம் அவளது மகன் ஒருவன்.

எல்லாம் முடிந்து பூமி ஒரு நிலைக்கு வர, நிலை தடுமாறுகின்றனர் மக்கள். ஓடி வந்த அந்த மற்றொரு மகன் எட்டிப் பார்த்து தன் தாயின், சகோதரனின் உடல்களை காட்டுகிறான்.

சுற்றி நிற்கும் மக்கள்

'பாவம், இவன் அம்மாவும், தம்பியும் தப்பிச்சுருக்கலாமே கடவுளே' என்கின்றனர்.’
________________________________________________________________

இதே காட்சியை மாயா யதார்த்த கதாசிரியர் பார்க்கிறார்;

   ‘ஹெய்டியின் தலைநகர் போர்டோப்ரின்சில் அந்த கறுப்பு நாள்.
சீட்டுக்கட்டை போல் நெருக்கியடித்துக் கொண்டிருக்கும் வீடுகளுக்கு வெளியே அந்த இரட்டை பிள்ளைகள் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

குழாய்த் தண்ணீரை எடுத்து வரும் அந்தத் தாய் தன் பிள்ளைகளை நோக்கி சத்தமாக குரல் கொடுத்த அதே நொடியில் பூமி நடுங்கியபடி நெஞ்சு பிளந்தது. ஓடிய தாயின் தலை மீது ஒரு கட்டடத்தின் மேல் தளம் தலை இறங்குகிறது.
அந்தப் பக்கம் அவளது மகன் ஒருவன்.

பட்டென வெளிச்சத்தை நிறுத்தியதை போல் ஒரே அந்தகாரம். அடி வயிற்றை பிசையும் நிசப்தம். சிதறிய மணிகளை கோர்த்ததைப் போல துகள்கள் கொஞ்சம் கொஞ்சமாய் சேர்ந்து சிந்தைனையாய் முழுமை பெற்றது.

தன் மீதிருந்த கட்டட தளத்திடமிருந்து தன்னை பிய்த்துக் கொண்டு வெளியே வந்த அந்தத் தாய், பிய்த்து வந்தது தன்னையா தன் நினைவுகளையா என சிந்தித்தாள்.

தனக்கு முன்னால் அங்கிருந்த தன் ஒரு மகனை அணைக்க நினைக்க, படர்ந்தன அலைகள். தன் பிறிதொரு மகனை தேடினாள்.

எல்லாம் முடிந்து பூமி ஒரு நிலைக்கு வர, நிலை தடுமாறுகின்றனர் மக்கள். ஓடி வந்த அந்த மற்றொரு மகன் எட்டிப் பார்த்து தன் தாயையும் சகோதரனையும் காட்டுகிறான்.

பரபரவென அவனை நோக்கி ஓடிய தாய் அவனருகே சென்று அவனை அள்ள முயன்று பின் பழைய இடத்திற்கே வந்தாள்.

'சே, அவனும் நம்மோடு வந்திருக்கலாமே, என்ன செய்வான் தனியா?..' என முணுமுணுத்தாள்.’

__________________________________________________________________

இங்கே இருவேறு உலகங்களும், அவற்றின் அனுபவ பதிவுகளையும் காணலாம்.

மேற்சொன்ன வழியில் பின்வரும் பயிற்சியை நண்பர் அண்ணாவின் மாணவர்களும், ஆர்வமுள்ள மற்றவர்களும் முயன்று பார்க்கலாம்;

‘நேற்று நீங்கள் கண்ட கனவுக்குள் நீங்கள் இப்போது நுழைகிறீர்கள். [கனவில் வந்த 'நீங்கள்' வேறு]. அந்த அனுபவத்தை பதிவு செய்யுங்கள், கதையாகவோ, கட்டுரையாகவோ, கவிதையாகவோ, ஓரிரு வாக்கியங்களாகவோ’.

மறக்காமல் உங்கள் முயற்சியை என்னுடன் பகிர்ந்து கொண்டால் மிக மகிழ்வேன்.

- புதுயுகன்
                                                                                   

Comments

  1. மிகவும் அருமையான தெளிவான இலகுவான விளக்கம் சார்.

    ReplyDelete
  2. வணக்கம் வந்தியத்தேவன்.

    கருத்துக்கு நன்றி. தொடர்ந்து தொடருங்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

When Democracy speaks the wise listen!

தேசியத் தமிழ்